'LOL: எங்க சிரி பாப்போம்' என்ற புதிய காமெடி நிகழ்ச்சி அமேசான் ப்ரைம் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. மாயா எஸ். கிருஷ்ணன், அபிஷேக் குமார், பிரேம்ஜி அமரன், ஆர்த்தி கணேஷ், ஆர்ஜே. விக்னேஷ் காந்த், பவர் ஸ்டார் சீனிவாசன், புகழ், பேகி, ஷ்யாமா ஹரிணி மற்றும் சதீஷ் ஆகிய 10 பங்கேற்பாளர்கள் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர்.
மறைந்த நடிகர் விவேக் மற்றும் மிர்ச்சி சிவா இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக இடம் பெற்றனர். ஆறு மணி நேரம் ஒரு அறையில் இப்போட்டியாளர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், சகப்போட்டியாளர்களை சிரிக்க வைக்க தங்களால் முடிந்த அளவிற்கு முயற்சிக்க வேண்டும். அந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 50 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களும் வெளியேற புகழ் மற்றும் அபிஷேக் இருவரும் கடைசி வரை கலந்துகொண்டு டைட்டில் வின்னர் பட்டம் வென்றனர்.
அதையடுத்து இருவருக்கும் ரூ. 25 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. மேலும் புகழ் 6 மணி நேரத்தில் 25 லட்சம் சம்பாதித்துவிட்டார் என்றும் பல செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் முன் பேசிய அவர் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
"நிறைய படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன். சந்தானம் அண்ணனுடன் 2 படங்கள் முடித்துள்ளேன். இதர படங்களுடைய அப்டேட் வந்து கொண்டிருக்கிறது. பெரிய படங்களுடைய அப்டேட்டை அவர்களே வெளியிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள்.
'எங்க சிரி பார்ப்போம்' நிகழ்ச்சியில் ஜெயித்தேன். அந்தப் பரிசுத் தொகையை இருவருக்குப் பிரித்துக் கொடுத்தார்கள். மொத்த பரிசுத் தொகை ரூ.25 லட்சத்தில் எனக்கு ரூ.12.5 லட்சம் வந்தது. அதில் டி.டி.எஸ் பிடித்தது போக மீதி ரூ.7 லட்சம் தான் கிடைத்தது.
அனைத்துச் செய்திகளிலும் ரூ.25 லட்சம் ஜெயித்தேன் என்று போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். என் கைக்கு வந்தது ரூ.7 லட்சம் மட்டுமே. அதையுமே ஊரில் வீடு கட்டக் கொடுத்துவிட்டேன். பிக் பாஸ் வீட்டிற்கு எல்லாம் செல்லவில்லை. என் வீட்டிற்குத்தான் செல்லவுள்ளேன்." என்று தெரிவித்துள்ளார்.