கொரோனா 2வது அலையில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி நாளை முதல் மே 31ம் தேதி வரை சின்னத்திரை, வெள்ளித்திரை என எவ்வித படப்பிடிப்பிலும் பங்கேற்கப்போவதில்லை என ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் ஃபெப்சி தொழிலாளர்களுக்காக செய்துள்ள மாபெரும் உதவி குறித்து ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளது பாராட்டுக்களை குவித்து வருகிறது.
அதாவது இயக்குநரும், தயாரிப்பாளருமான மணிரத்னம், மற்றொரு தயாரிப்பளரான ஜெயந்திராவுடன் இணைந்து நவரசா என்ற படத்தை தயாரித்துள்ள அனைவரும் அறிந்ததே.
9 உணர்வுகளை பிரதிபலிக்கும் 9 கதை அம்சங்களைக் கொண்ட ஆந்தாலஜி படத்தை கெளதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், கே.வி. ஆனந்த், பொன்ராம், ரதிந்திரன், ஹலிதா, பிஜாய் நம்பியார். அரவிந்த் சாமி ஆகியோர் இயக்கியுள்ளனர்.
சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அரவிந்த் சாமி, சித்தார்த், அசோக் செல்வன், ரேவதி, நித்யா மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்வதி, ரித்விகா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.
ஏ.ஆர். ரஹ்மான், இமான், ஜிப்ரான், கோவிந்த் வசந்தா போன்ற பிரபல இசையமைப்பாளர்களும் சந்தோஷ் சிவன் உள்ளிட்ட பிரபல ஒளிப்பதிவாளர்களும் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளார்கள். இந்த படம் விரைவில் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
தனது தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள நவரசா பட விற்பனையிலிருந்து ரூ.10 கோடியை ஃபெப்சி தொழிலாளர்களுக்கு இயக்குநர் மணிரத்னம் வழங்க உள்ளார்.
அதாவது ஃபெப்சி உறுப்பினர்கள் 10 ஆயிரம் பேருக்கு வங்கி மூலமாக மாதம் ரூ.1,500 வீதம் 6 மாதங்களுக்கு கொடுக்க உள்ளதாக ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். இதுபோல பிற கலைஞர்களும் உதவ வேண்டுமென ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.