அதிகமானவர்களால் ரசிக்கப்படும் டிவி ரியாலிட்டி ஷோவாக இருப்பது விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
2017 ம் ஆண்டு துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. கடந்த நான்கு சீசன்களையும் நடிகர் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
விரைவில் துவங்கப்பட உள்ள ஐந்தாவது சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்க உள்ளார். இதற்காக ப்ரோமோ, புதிய லோகோ ஆகியன சமீபத்தில் வெளியிடப்பட்டன.
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜுன் - ஜுலை மாதங்களில் துவங்கப்பட்டு செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நிறைவு செய்யப்படும். முதல் மூன்று சீசன்களும் அப்படி தான் நடத்தப்பட்டது.
ஆனால் கொரோனா காரணமாக கடந்த சீசன் தாமதமாக அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது. ஆனால் ஐந்தாவது சீசன் ஜுலை மாதம் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்த ஆண்டும் தாமதமாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட உள்ளது.
மொத்தம் 18 போட்டியாளர்கள், 100 நாட்கள், 16 கேமிராக்களின் கண்காணிப்பில், வெளியுலக தொடர்பு ஏதுமின்றி தனி வீட்டில் வசிக்க வேண்டும். இவர்களுக்கு வாரந்தோறும் டாஸ்க்கள் கொடுக்கப்பட்டு, பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்படும்.
போட்டியாளர்கள், மக்கள் அளிக்கும் ஓட்டுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அடுத்தடுத்த வாரங்களுக்கு செல்வார்கள். மக்களின் ஆதரவை பெற தவறுபவர்கள், வார இறுதியில் நடக்கும் எலிமினேஷன் ரவுண்டில் வெளியேற்றப்படுவார்கள்.
இவ்வாறு பிக்பாஸ் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்படும் போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உடனேயே, அவர்கள் ஸ்டார் ஓட்டலில் தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள்.
குறைந்தபட்சம் 20 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு, பிறகு பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
முந்தைய சீசன்களை போல் இல்லாமல் ஐந்தாவது சீசனின் விதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த 30 பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
பிக்பாஸ் சீசன் 4 முடிவடைந்தது முதலே ஐந்தாவது சீசன் எப்போது துவங்கும், யாரெல்லாம் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள் என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர்.
பிக்பாஸ் சீசன் 5 பற்றி ஏதாவது ஒரு தகவல் வெளியாகி, இந்நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரிக்க செய்தது. அதோடு போட்டியாளர்கள் பட்டியல் என பல பட்டியல்கள் வெளியாகி பரபரப்பை கூட்டி வருகின்றன.
லேட்டஸ்ட் தகவலின்படி, பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் அக்டோபர் 3 ம் தேதி தான் துவங்கப்பட உள்ளது.
வழக்கத்திற்கு மாறாக போட்டியாளர்கள் ஒரு வாரம் மட்டுமே ஸ்டார் ஓட்டலில் தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்களாம். இந்த முறை விஜய் பிரபலங்கள் மிக குறைவாகவே கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் ஷகீலாவின் வளர்ப்பு மகள் மிலா, விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனி, சுனிதா கோகாய், ஜி.பி.முத்து உள்ளிட்டோரின் பெயர்கள் போட்டியாளர்கள் பட்டியலில் அதிகம் அடிபடுகிறது.
ஆனால் அக்டோபர் 9 ம் தேதி வரை கமல் பிஸி என்பதால் அதற்கு பிறகே பிக்பாஸ் சீசன் 5 துவங்கப்படப்படலாம் எனவும் கூறப்படுகிறது.