இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. அனைத்து மாநில அரசுகளும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் தடுப்பூசி தொடர்பாக நடிகை குஷ்பு அரசு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கி உள்ளார். சமீபத்தில் பாஜக.,வில் இணைந்த குஷ்பு, தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டார்.
தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் விபரத்தை ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே ரேஷனில் பொருட்கள் வழங்கப்படும். அப்படி செய்தாலாவது தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பலர் ஊசி போட முன் வருவார்கள் என வலியுறுத்தி உள்ளார்.
குஷ்புவின் இந்த பதிவு தான் ட்விட்டரில் தற்போது விவாத பொருளாக மாறி உள்ளது. நாடு இருக்கும் இக்கட்டான சூழலில் குஷ்புவின் இந்த அராஜக தனமான பேச்சை பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
குஷ்புவிற்கு எதிராக பலர் கருத்துக்களை குவித்து வருகின்றனர். சிலர் ஆதரவாகவும் கருத்து பதிவிட்டு பதிவிட்டு வருகின்றனர். விமர்சிப்பவர்களுக்கும் குஷ்பு ட்விட்டரில் காரசாரமாக பதிலளித்து வருகிறார்.
லாக்டவுன், கொரோனா பரவல் காலத்தில் வேலை இழந்து, தொழில்கள் முடக்கப்பட்ட நிலையில் ஏழைகளுக்கு அரசு தரும் ரேஷன் பொருட்கள் தான் உதவிகரமாக இருக்கையில், குஷ்பு இப்படி பேசி உள்ளாரே என பலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.