தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேர்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் தமிழக அரசுக்கு உதவும் விதமாக அனைவரும் தாராளமாக நிதி அளிக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ரூ.10 லட்சமும், திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடியும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ரூ.25 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கினர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா தன்னுடைய கணவர் விசாகனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சம் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
திரையுலகைப் பொறுத்தவரை முதல் ஆளாக நடிகர் சிவக்குமார் தன்னுடைய மகன்களும், பிரபல நடிகர்களுமான சூர்யா, கார்த்தி ஆகியோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி நிதி வழங்கினார். நேற்று தல அஜித் சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் ஆன்லைன் மூலமாக ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த வரிசையில் பிரபல இயக்குநர் ஷங்கர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதி அளித்துள்ளார்.