ஒரு நட்சத்திரத்தின் படம் வெற்றி பெற்றால் உடனடியாக அவரது சம்பளம் உயரும். டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் சம்பளமும் உயர்ந்துள்ளது.
ஓடுகிற குதிரையில் கண்ணை மூடி கோடிகளை கொட்ட திரையுலகம் தயங்குவதில்லை. முன்னணி நடிகர்கள் தாங்களாக சம்பளத்தை உயர்த்த வேண்டியதில்லை.
ஒரு நடிகரின் இரண்டு படங்கள் ஓடினால், அவரது கால்ஷீட்டை பெற தயாரிப்பாளரே நடிகரின் மார்க்கெட்டைவிட அதிக கோடிகளை தர முன்வருவார்.
இதுதான் தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வருகிறது. படம் முடிந்து வியாபாரம் ஆகும் நேரத்தில் கடன் தொல்லையை காரணம் காட்டி அதே நடிகரின் சம்பளத்தை குறைப்பதும், தராமல் டிமிக்கி கொடுப்பதும் இதே தயாரிப்பாளர்கள்தான்.
தி பேமிலி மேன் 2 வெப் தொடரின் வெற்றிக்குப் பின் சமந்தாவின் சம்பளம் உயர்ந்துள்ளது. அதேபோல், டாக்டர் படத்துக்குப் பின் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.
ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களை தவிர்த்து புதிதாக வரும் படங்களுக்கு முன்பு வாங்கியதைவிட 5 கோடிகள் அவர் அதிகம் கேட்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான அவரது டாக்டர் திரைப்படம் உலக அளவில் 100 கோடிகளைத் தாண்டி வசூலித்தது. இதன் காரணமாக சம்பளத்தை உயர்த்தி உள்ளார். அவர் கேட்காமலே சம்பளத்தை உயர்த்தி தர தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதே உண்மை.
சிவகார்த்திகேயன் நடிப்பில் டான், அயலான் படங்கள் தயாராகி வருகின்றன. இதில் டான் முதலில் வெளியாக உள்ளது.