திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் இருந்து நகை, பைக் என ரூ.250 லட்சத்துக்கு பொருட்களை வாங்கிவிட்டதாக பிக்பாஸ் புகழ் ஜூலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருவர் மீதும் தவறு இருப்பதை அறிந்த போலீசார் , இருவருக்கு அட்வைஸ் செய்து அனுப்பினர்
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டம் மூலம் கவனம் பெற்றவர் ஜூலி (எ) மரியா ஜூலியானா(26). பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பரிச்சயமானார்.
தற்போது, சினிமாவிலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்தார்.
புகாரில், அழகு நிலையத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்த அமைந்தகரை அய்யாவு காலனி பகுதியைச் சேர்ந்த மனிஷ்(26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக நெருக்கமாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது மனிஷ் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக புகாரில் தெரிவித்த ஜூலி, மனிஷுக்கு தான் பல்சர் இருசக்கர வாகனம், 2 சவரன் தங்க செயின், வீட்டுக்கு தேவையான பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் வாங்கிக் கொடுத்து 2.50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாக கூறியிருந்தார்.
புகார் தொடர்பாக போலீசார் மனிஷை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த 2017 ம் ஆண்டு ஜூலிக்கும் அவரது முன்னாள் காதலருக்கும் பிரச்சனை எழுந்தபோது மனிஷ் ஜூலிக்கு ஆறுதலாக இருந்துள்ளார்.
இதையடுத்து அவர்களுக்கு இடையே நட்பு உண்டாகி அது காதலாக மாறியது. தற்போது வேறொருவருடன் ஜூலி நட்பாக பழகிவருவதால் மனிஷ் உடனான காதலை அவர் துண்டித்துள்ளார்.
ஜூலியின் இந்த திடீர் காதல் துண்டிப்பை தாங்கிக்கொள்ள இயலாத மனிஷ் ஜூலிக்கு கால் செய்து தன்னை பிரிந்து செல்ல வேண்டாம் எனவும் தன்னால் நீ இல்லாமல் வாழ இயலாது எனவுக் கூறி அழுது அடிக்கடி கால் செய்து வந்ததாகவும் தெரியவருகிறது.
போலீசார் விசாரணையையடுத்து மனிஷ் தாமாகவே முன்வந்து ஜூலி வாங்கி கொடுத்த தங்க நகை, ஃபிரிட்ஜ் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் முன்னிலையில் திருப்பியளித்துள்ளார்.
மேலும் ஜூலியும் மனிஷும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை போலீசார் அழித்துவிட்டு ஜூலி மற்றும் மனிஷ் ஆகிய இருவருக்கும் அறிவுரைக்கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.