பிரபல நடிகர் ஆர்யா, தன்னைதிருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.70 லட்சம் பெற்று மோசடி செய்ததாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஜெர்மனியைச் சேர்ந்த இளம்பெண் விட்ஜா, சென்னை பெருநகரகாவல்துறையில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடிகர் ஆர்யா மற்றும் அவரது தாயார் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணையில், திடீர் திருப்பமாக நடிகர் ஆர்யாஎன்ற பெயரில் வேறு ஒரு நபர், அந்த பெண்ணிடம் பேசி பணம் மோசடி செய்திருப்பதை போலீஸார் உறுதி செய்தனர்.
ஆர்யா என்ற பெயரில்விட்ஜாவிடம் பேசி மோசடி செய்ததாக சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான் (32), அவரது உறவினர் முகமது ஹூசைனி பையாக் (34) ஆகிய இருவரை கடந்த 10-ம் தேதி கைது செய்தனர்.
இந்நிலையில், வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில், ஆர்யாவின் பெயர் முதல் குற்றவாளியாகவும், அவரது தாயார்2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருந்ததாகவும், எனவே அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ‘‘ஜெர்மன் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆர்யா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், நடிகர் ஆர்யாவின் செல்போனில் இருந்துஜெர்மன் பெண்ணுக்கு பேசப்படவில்லை என்பது தெரிந்தது.
பெண்ணிடம் பேசிய செல்போன் எண்ணை வைத்து அவரிடம் பேசியவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்ததற்காக நடிகர் ஆர்யா காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார்’’ என்று கூறினார்.