ஒருகாலத்தில் ஸ்டூடியோக்களில் மட்டுமே சுழன்று கொண்டிருந்த சினிமாவை காடு, மலை, அருவி என அதன் இடங்களுக்கே நேரில் சென்று படமெடுத்தவர் இயக்குநர் பாரதிராஜா.
முதன் முதலில் 16 வயதினிலே படத்திற்காக கிராமப்புறத்தை அவுட்டோர் ஷூட்டிங் புறப்பட்டது அவருடைய கேமரா தான். அந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் பி.எஸ்.நிவாஸ். சென்னை அடையாறில் உள்ள பிலிம் இன்ஸ்ட்யூட்டில் படித்தவர்.
1977ம் ஆண்டு வெளியாகின மோகினியாட்டம் என்ற மலையாள படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருது பெற்றுள்ளார். பல காலத்திற்கு இவர் தான் பாரதிராஜாவின் ஆஸ்தான கேமராமேனாக பணியாற்றினார்.
சிகப்பு ரோஜாக்கள், நிறம் மாறாத பூக்கள், புதிய வார்ப்புகள் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். ஸ்ரீதர் இயக்கிய இளமை ஊஞ்சலாடுகிறது, இசைஞானியின் தயாரிப்பான கொக்கரக்கோ போன்ற திரைப்படங்களுக்கும், தனிக்காட்டு ராஜா,பாஸ்மார்க், மைடியர் லிசா போன்ற படங்களிலும் கேமராமேனாக பணியாற்றியுள்ளார்.
இவருடைய ஒளிப்பதிவில் வெளியான சலங்கை ஒளி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக வலம் வந்த நிவாஸ் காலமானார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட இயக்குநர் பாரதிராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், என் திரைப் பயணமான 16 வயதினிலே முதல் தொடர்ந்து ஐந்து வெற்றிகளுக்கு துணை நின்ற பெரும் படைப்பாளி, இந்திய திரை உலகின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்,என் நண்பன் நிவாஸ் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள் என அவருடைய புகைப்படத்துடன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.