தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நாயகியான நடிகை லட்சுமி இறந்துவிட்டதாகப் பரவிய செய்தி, அவரையும் அவரது ரசிகர்களையும் மிகவும் வேதனைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது.
புதுச்சேரியில் யானை லட்சுமி உயிரிழந்த செய்தி பலரது இதயத்தையும் உலுக்கிய நிலையில், ஒரு சில விஷமிகள் யானை லட்சுஙமிக்குப் பதிலாக நடிகை லட்சுமி உயிரிழந்து விட்டார் என பொய்ச் செய்தியைப் பரபரவெனக் கிளப்பி விட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.
ஜாக்கி சான் இறந்து விட்டார், சாலமன் பாப்பையா காலமானார் என தேவையற்ற வதந்திகளை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் சில நெட்டிசன்கள் பரப்பி வருவதை வாடிக்கையாகக் கொண்டு உள்ளனர். அதுபோலவே, நடிகை லட்சுமி இறந்ததாக வதந்தியைக் கிளப்பிவிட்டுள்ளனர்.
பழம்பெரும் நடிகை லட்சுமி உயிரிழந்துவிட்டதாகத் தீயாகப் பரவிய வதந்தியைக்கொண்டு அவரது அபிமானி ஒருவர் உடனடியாக நடிகையை லட்சுமியை போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு நடிகை லட்சுமி, தான் நலமாக உள்ளேன் என்றும் ஏன் இப்படி கிளப்பி விடுறாங்க என்றும் மிகவும் மனவருத்தத்துடன் விளக்கம் கொடுத்துள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் 1961ம் ஆண்டு வெளியான, 'ஸ்ரீவள்ளி' திரைப்படத்தில் குழந்தை வள்ளியாக நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி.
அதனைத் தொடர்ந்து 'மாட்டுக்கார வேலன்', 'பெண் தெய்வம்', 'குமரிக்கோட்டம்', 'சம்சாரம் அது மின்சாரம்', 'ஜீன்ஸ்', 'உன்னைப்போல் ஒருவன்' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை லட்சுமி.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய நடிகையாக வலம் வரும் பழம்பெரும் நடிகை லட்சுமி திடீரென இறந்துவிட்டதாக செய்திகள் சமூக வலைத் தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தன.
இதனைத் தொடர்ந்து பல்வேறு ஊடகவியலாளர்களும் பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் நடிகை லட்சுமியின் அபிமானிகளும் நடிகை லட்சுமிக்கே போன் போட்டு அது முற்றிலும் வதந்தி என்பதை அறிந்து கொண்டனர்.
இந்த வதந்தி குறித்து நடிகை லட்சுகியிடமே போன் செய்து விசாரித்த நிலையில், ''நான் ரொம்ப நல்லாவே இருக்கேன்ப்பா... பிறந்து விட்டால் என்றாவது ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும். மரணத்திற்காக எல்லாம் நான் எப்போதும் பயந்தது கிடையாது. யாரு இப்படி வேலை வெட்டி இல்லாமல் இந்த வதந்தியைக் கிளப்பிவிட்டது என தெரியவில்லை.
எனக்கு ஏதோ ஆகிடுச்சுன்னு பதறிப் போய் போன் போட்டு காலையில் இருந்தே ஏகப்பட்ட மீடியா நண்பர்களும் திரையுலக நண்பர்களும் விசாரித்து வருகின்றனர். லட்சுமி மீது அக்கறை கொண்டவர்களும் இங்கே நிறைய பேர் இருக்காங்க என்பதை நினைக்கும் போது ரொம்பவே மனசுக்கு சந்தோஷமாக இருக்கு'' என்று கூறியிருக்கிறார்.
நடிகை லட்சுமிக்கு வரும் டிசம்பர் 13ம் தேதி பிறந்தநாள். அன்றுடன் அவருக்கு 70 வயது நிறைவடைகிறது. அதற்குள் நடிகை லட்சுமி இறந்துவிட்டதாக தேவையற்ற வதந்திகளை சமூக வலைத் தளங்களில் சில விஷமிகள் பரப்பி உள்ளனர். ''நான் நல்லா ஆரோக்கியமாகத்தான் இருக்கேன். இப்போ காய்கறி கடையில் காய்களை வாங்கிக் கொண்டு இருக்கேன்'' என்று கேட்டவர்களுக்கெல்லால் புன்னகையோடு பதிலளித்து பொய்வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை லட்சுமி.