பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் குதிரை உயிரிழந்ததையடுத்து, இயக்குநர் மணிரத்னம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எழுத்தாளர் கல்கியின் கிளாசிக் நாவலான பொன்னியின் செல்வனை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கி வருகிறார்.
இதற்கான திரைக்கதை, வசனத்தை ஜெயமோகன் எழுத, கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி வருகிறது. கொரோனா தொற்றால் மற்ற படங்களைப் போல பொன்னியின் செல்வன் படப்பிடிப்பும் தடைபட, தற்போது இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது.
இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் பிரமாண்ட செட் அமைத்து படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அரசர் கால கதை என்பதால் ஏராளமான குதிரைகளும் இந்தப் படத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இதையடுத்து சுமார் 80 குதிரைகள் படப்பிடிப்பில் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 11-ஆம் தேதி பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் குதிரை ஒன்று உயிரிழந்தது. இதையடுத்து ஐதராபாத் அப்துல்லாபுர்பேட் போலீசார் மெட்ராஸ் டாக்கீஸ் உரிமையாளரான மணிரத்னம் மீதும், குதிரையின் உரிமையாளர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், விலங்குகள் நல வாரியம் (PETA) இதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், தெலங்கானா விலங்குகள் நல வாரியத்துக்கும் கடிதம் எழுதியுள்ளது