இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் பலரால் வெகுவாகப் பாராட்டப்படுகிறது.
எழுபதுகளில் வடசென்னை பகுதியில் குத்துச்சண்டை குழுக்களிடையே நிகழும் சம்பவங்களின் அடிப்படையில் இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ஆர்யா, பசுபதி முதலானோர் தங்கள் நடிப்புக்காகப் பாராட்டப்பட்டு வரும் வேளையில், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது ‘டேன்ஸிங் ரோஸ்’ கதாபாத்திரம்.
இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ஷபீர் கல்லரக்கல். அவரது ஸ்டைலான பாக்சிங் விளையாட்டும், அந்தக் கதாபாத்திரத்திற்கே உரிய உடல்மொழியும் அதற்கு வலுசேர்த்திருக்கிறது.
ஷபீர் நாடக கலைஞர். மேலும், ’பார்க்கவுர்’ (Parkour) என்று அழைக்கப்படும் சண்டைக்கலையில் தேர்ந்தவர் என்பதால் அது அவரை டேன்ஸிங் ரோஸ் ஆக நடிப்பதற்கு உதவியிருக்கிறது. ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்காக முறையாக பாக்ஸிங் பயிற்சி எடுத்திருக்கிறார் ஷபீர்.
2014ஆம் ஆண்டு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘நெருங்கி வா முத்தமிடாதே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகியிருக்கிறார் ஷபீர்.
ஜெயம் ரவி நடித்த ‘அடங்க மறு’, ரஜினிகாந்த் நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பேட்ட’படத்தில் நவாசுதீன் சித்திகின் மகனாக, விஜய் சேதுபதியின் சகோதரனாக நடித்திருந்தாலும், ஷபீருக்கு ‘சார்பட்டா பரம்பரை’ மிகப்பெரிய புகழைக் கொடுத்திருக்கிறது.