தமிழ் சினிமாவில் சுமார் 20 வருடங்களாக, காமெடி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த, நடிகர் மாறன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது, திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம், தமிழ் திரையுலகின் பிரபல காமெடி நடிகரும், அதிமுக கொடியை வடிவமைத்தவருமான நடிகர் பாண்டு கொரோனா தொற்றால் மரணமடைந்தார்.
அன்றைய தினமே ஆட்டோகிராப் படத்தில் ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலில் நடித்த கோமகன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். மேலும் இயக்குனர் தாமிரா, ஜோக்கர் துளசி என அடுத்தடுத்து, முக்கிய பிரபலங்களை பலி வாங்கியது கொரோனா.
இவர்களை தொடர்ந்து, 48 வயதே ஆகும், விஜய் பட நடிகர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
நடிகர் மாறன் 2000 ஆம் ஆண்டு வெளியான, வேதம் என்கிற படத்தின் மூலம் அறிமுகமாகி, தளபதி விஜய் நடித்த 'கில்லி' படத்தில் ஆதிவாசி என்கிற வேடத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். மேலும் டிஷ்யும், தலைநகரம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
செல்கல்பட்டு மாவட்டம் நத்தம் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்த இவர், கொரோனா தொற்று காரணமாக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்த இவருக்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சைபாலனின்றி உயிரிழந்தார். நடிகர் மாறனின் மறைவு, தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் பலர் தொடர்ந்து இவருக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.