தமிழக அரசானது திரையுலகில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்து வருகிறது.
அந்த வகையில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் 128 பேருக்கும், ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது 6 பெண் கலைஞர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் கலைஞர்களுக்கு 5 சவரன் தங்க பதக்கம், சான்றிதழை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கெளரவித்தார்.
இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களைச் சந்தித்தார். “மிகவும் மகிழ்ச்சியான தருணம். இந்த சமயத்தில் நான் இங்க நிற்க காரணமான தமிழக மக்களுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி.
என் அப்பாவுக்கும், என் அம்மாவுக்கும் என்னுடைய நன்றி. என்னுடைய ரசிகர்களான தம்பி, தங்கைகளுக்கு நன்றி” எனக்கூறினார்.
செய்தியாளர் ஒருவர் சிவகார்த்திகேயனிடம் முதன் முறையாக கோட்டைக்குள் வந்துள்ளது எப்படியுள்ளது எனக்கேட்டார். அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த சிவகார்த்திகேயன், ஆமா... முதன் முறையாக உள்ளே வந்திருப்பதால் ஒரு குழந்தை இந்த இடத்தை பார்க்கிற போது ஏற்படுகிற பிரம்மிப்பு எனக்கூறினார்.
மக்கள் பிரதிநிதியாக வர வேண்டும் ஆசை இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், `அதற்கு ஆசை இல்லை... ஆனால் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான் இன்னும் என்னுடைய திறமையை அதிகபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறேன்’ என நச்சென பதிலடி கொடுத்து சிரித்துக்கொண்டே நழுவிவிட்டார்.