நம் மைண்ட் வாய்ஸ் எல்லாவற்றையும் கமல் நேற்றைய எபிசோடில் வெளிப்படையாகப் பேசியது போல் இருந்தது. அதிலும், கடந்த வாரத்தில் கதை சொன்னவர்கள் தரப்பில் இருந்த விமர்சனங்களை உடைத்து, அனைவரையும் பாராட்டிய விதம் அருமை. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அபிஷேக் ராஜா ஆட்டம் வர வரக் கொஞ்சம் ஓவரா போகுதோ!
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் என்னதான் நடந்திருக்கும் என்று நம்மை சிந்திக்க வைத்தபடி எடிட்டிங்கில் தன் கைவரிசையை காட்டியிருப்பார். இதுதான் நடந்தது என்று நேற்றைய எபிசோடில் அபிஷேக் ராஜா, அக்ஷரா, பாவனி ஆகியோர் சம்பந்தப்பட்ட சில டிஷ்யூம் டிஷ்யூம் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
கத்தி கத்தி பேசிவிட்டு, ‘நான் கத்தி பேசலை, இதுதான் நான்’ என்று சொன்னது, அம்மா என்கிற வைராக்கியம் உள்ளது என்று சின்னப்பொண்ணுவை பார்த்து பேசியது என அபிஷேக் ராஜாவின் நடிப்பு ஒரு எண்டு கார்டே இல்லாமல் நகர்ந்தது. தன் உண்மையான அம்மாவிடம் அந்த வைராக்கியம் எங்கே போச்சு என்றுதான் தெரியவில்லை.
அடுத்ததாக மது மற்றும் பாவனி, அவள் அவள் என்று யாரையோ பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். யாருடா அந்த அவள்? கொஞ்சம் சொல்லுங்கடா என்பது போல இருந்தது. இறுதியாக அவர்கள் அக்ஷ்ராவை பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்தான் நம்மை நாமினேட் செய்துள்ளார் என்றும் கொஞ்சமாக மதுவிடம் கொளுத்திப்போட்டுக்கொண்டிருந்தார் பாவனி. கொஞ்சும் தமிழில் எப்படியெல்லாம் அழகாகப் பற்றவைத்து இருக்கிறார். சூப்பரோ சூப்பர்!
அப்படியே இந்த சீனை கட் செய்து இன்னொரு ஆங்கிளில் திரும்பினால், அபி மற்றும் பிரியங்கா, அபிநய் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். ஆஹா நம்மளை பற்றி ஒருவேளை பேசுகிறார்களோ என்கிற சந்தேகத்தில் அபிநய் அங்கு வந்தாரோ என்னவோ, அப்படியே அவர்கள் பிளேட்டை திருப்பி போட்டதெல்லாம் ‘உலக மகா நடிப்புடா சாமி’ டெம்ப்லேட்தான்.
அதனைத் தொடர்ந்து, ‘நான் இன்னும் என் கேமை விளையாடவே ஆரம்பிக்களை’ என்று சொன்னது, ‘நான் ஆரம்பிச்சா எல்லோரும் வீட்டை விட்டு வெளியே போய்டுவாங்க’ எனக் கூறிய டயலாக் என அபிஷேக்கின் வார்த்தைகளும், பாடி லேங்குவேஜ்ஜும் கடுப்பை கிளப்பின. யார்ரா இது இப்படி காமெடி பண்ணிக்கிட்டு இருக்கார் என்பது நிச்சயம் இவருக்கு பக்காவாகப் பொருந்தும். ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது அபி.
இதனைத் தொடர்ந்து உலக நாயகன் அகம் டிவி வழியே வீட்டிற்குள் நுழைந்து, சென்ற வாரம் கதை சொன்ன தாமரை, ராஜு ஆகியோர்களிடம் பேசினார். ஒரு பக்க கதையை மட்டுமே கேட்டு எந்தவித முடிவும் எடுக்க முடியாது என்றும், நிச்சயம் தன் மகன் உண்மையைப் புரிந்துகொள்வார் என்றும் தாமரைக்குக் கொடுத்த அட்வைஸ் அருமை.
அதன்பிறகு, ராஜுவின் கதையைப் பாராட்டிய கமல் இப்போது இன்டெர்மிஷனில் அல்ல, இப்போதுதான் புதிய தொடக்கத்தில் உள்ளது என்று சுட்டிக்காட்டிய விதமும் ஆஸம். ஆகமொத்தத்தில் நேற்றைய எபிசோடின் ஹீரோ என்றால் அது நம்ம உலக நாயகன்தான். வாழ்த்துக்கள் கூறுவதிலும், பிரச்சனைகளில் இருக்கும் பாசிட்டிவ் விஷயங்களை எடுத்துக்கூறியதிலும் உண்மைத்தன்மை நிறைந்ததாகவே இருந்தது.
பிரியங்கா அக்ஷரா இடையே என்னதான் மோதலோ என்று கடந்த ஒரு வாரமாக நம் மூளையைப் பிசைந்து கொண்டிருந்த கேள்வியை கமல் பிரியங்காவிடமே முன்வைத்தார். அதற்கு பிரியங்கா கூறிய விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. மிஸ் க்ளோப் எனும் மிகப் பெரிய பட்டத்தை இந்தியா சார்பில் வாங்கி தன் பெற்றோருக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் அக்ஷரா.
இதைவிட என்ன பெரிதாக அக்ஷரா சாதிப்பதற்காக அவரை தாழ்த்திப் பேசி மோட்டிவேட் செய்கிறார் என்பதுதான் விளங்கவில்லை. ஹ்ம்ம்… ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்.
அடுத்ததாக, பாவனி அக்ஷரா பனிப்போர் பற்றி கமல் எழுப்பிய கேள்விகளும், பாவனி தனக்கே அறியாமல் செய்த பிழையை சுட்டிக்காட்டிய விதமும் நன்றாக இருந்தது. இதுபோன்ற நிகழ்வு நம் வாழ்விலும் அடிக்கடி நடப்பதுண்டு. நம்மை அறியாமலே பிறரை நகைச்சுவை என்கிற பெயரில் காயப்படுத்துவதுண்டு. பிற இடத்தில் நின்று பார்த்தால் மட்டுமே அவர்களின் வலிகளும் வேதனைகளும் நமக்குப் புரியும். இதனை மிகத் தெளிவாக விளக்கினார் கமல்.
இப்படி பலரின் பலரைப் பற்றிய தவறான புரிதல்களுக்கு விளக்கம் அளித்தபடி நகர்ந்த நேற்றைய எபிசோடில் சிலர் காப்பாற்றப்பட, இறுதியாக சின்னப்பொண்ணு, அபிஷேக், நடியா சங், மதுமிதா, வருண் ஆகிய ஐந்து பேரில் இருந்து ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார் என்பதோடு நேற்றைய நிகழ்ச்சி நிறைவடைந்தது. அரசல்புரசலாக வெளிவந்த தகவலின்படி நடியா சங்தான் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இது உண்மைதானா என்று தெரிந்துகொள்ளக் கொஞ்சம் காத்திருக்கவும்!