’எதிராளி கலகலத்துப் போகணும்! இது நம்ம ஆட்டம்!’ - ‘சார்பட்டா’ விமர்சனம்!

3 years ago 422

நடிகர்கள்: ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன்

ஒளிப்பதிவு: முரளி.ஜி.; இசை: சந்தோஷ் நாராயணன்; இயக்கம்: பா. ரஞ்சித்; வெளியீடு: அமெஸான் பிரைம்.

விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படங்கள், இயக்குனர்களுக்கு மிகச் சவாலானவை. படம் பார்ப்பவர்களுக்கு அந்த விளையாட்டு அறிமுகமில்லாவிட்டால், துவக்கத்திலேயே ஆர்வமில்லாமல் போகக்கூடும். அப்படி ஒரு சவாலை ஏற்று களமிறங்கியிருக்கும் பா. ரஞ்சித், முதல் காட்சியிலேயே அந்த சவாலைக் கடந்துவிடுகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் ஆச்சரியம்.

1975ன் பிற்பகுதியில் நடக்கிறது கதை. அந்த காலகட்டத்தில், வடசென்னையில் சார்பட்டா பரம்பரை - இடியாப்ப பரம்பரை என்ற இரண்டு குத்து சண்டைக் குழுக்களிடையே நிலவும் பகைமைதான் படத்தின் அடிப்படை.

சார்பட்டா பரம்பரையைச் சேர்ந்த ரங்கன் வாத்தியாருக்கு, (பசுபதி) இடியாப்ப பரம்பரை சவால் விடுக்கிறது. அந்த சவாலை ரங்கன் வாத்தியார் எதிர்கொள்வதற்கு உதவும் சிஷ்யனாக வருகிறான் கபிலன் (ஆர்யா). இரு குழுக்களிடையிலான இந்தப் பந்தையத்தில் இறுதியாக ஜெயிப்பதற்கு முன்பாக கபிலன் எதையெல்லாம் ஜெயிக்க வேண்டியிருக்கிறது என்பதே படம்.

வட சென்னை, குத்துச் சண்டை என்றவுடன் மனதில் தோன்றும் வழக்கமான டெம்ப்ளேட்களை கலைத்துப் போட்டபடி துவங்குகிறது படம். ஆரம்பித்து ஐந்து நிமிடங்களிலேயே மிக வேகமாக உச்சகட்டத்தை நோக்கி நகர ஆரம்பிக்கிறது திரைக்கதை.

அடுத்த ஒரு மணி நேரம் 'அட்ரிலின் ரஷ்'தான். அதற்குப் பிறகு, சற்று தொய்வைச் சந்திக்கும் திரைக்கதை, அரை மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் வேகமெடுத்து, ஒரு அட்டகாசமான உச்சகட்ட காட்சியில் நிறைவடைகிறது.

குத்துச் சண்டையை அடிப்படையாக வைத்துவந்த படங்களை Rockyயோடு ஒப்பிடுவார்கள். ஆனால், இந்தப் படத்தில் வரும் குறியீடுகளும் நுண்ணுணர்வும் காட்சிகளில் தென்பட்டு மறையும் அரசியலும் சார்பட்டா பரம்பரையை Rockyஐவிட ஒருபடி மேலே நிறுத்துகிறது.

தமிழ்த் திரைப்படங்களில் பல வருடங்களாகவே கதாநாயகன் - வில்லன் என்ற இரண்டு பாத்திரங்களைத் தவிர்த்து மற்ற பாத்திரங்கள் எந்த முகமுமின்றி, கதாநாயகன் அல்லது வில்லனின் துணைப் பாத்திரங்களாகவே வந்து போவார்கள்.

இந்தப் படத்தில் மாரியம்மாள், ரங்கன் வாத்தியார், பாக்கியம், வெற்றிச் செல்வன், டாடி, ராமன், டான்சிங் ரோஸ், வேம்புலி, தணிகை என ஒவ்வொரு பாத்திரமும் ஏதோ ஒரு காட்சியில் கதாநாயகனாகவோ வில்லனாகவோ மிளிர்கிறார்கள்.

படத்தில் பிரதானமாக வரும் ரங்கன் வாத்தியார் பாத்திரத்தை விட்டுவிட்டுப் பார்த்தால்கூட, டாடி, ராமன், வேம்புலி என ஒவ்வொருவருக்கும் கதையில் ஒரு தருணம் இருக்கிறது. 'டான்சிங் ரோஸ்' என்ற பாத்திரம் படத்தின் சில காட்சிகளில் மட்டுமே வருகிறது. ஆனால், படம் முடிந்த பிறகும் மறக்கமுடியாத பாத்திரமாக அமைந்துவிடுகிறது. டான்சிங் ரோஸை மையமாக வைத்தே ஒரு படம் எடுக்கலாமே என்று தோன்றுகிறது.

அதேபோலத்தான் ஜான் விஜய் ஏற்று நடித்திருக்கும் 'டாடி' என்ற பாத்திரம். ஆங்கிலமும் தமிழும் கலந்துபேசும் ஆங்கிலோ இந்தியன் பாத்திரத்தில் வரும் ஜான் விஜய், பல தருணங்களில் ஃப்ரேமில் உள்ள மற்றவர்களைத் தாண்டிப் பிரகாசிக்கிறார்.

இந்தப் படத்திற்கு கடும் உழைப்பைச் செலுத்தியிருக்கிறார் ஆர்யா. படத்தின் முதல் ஒரு மணி நேரத்தில் அதற்கான பலன் தெரிகிறது. அவருடைய கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கக்கூடும். ரங்கன் வாத்தியாராக வரும் பசுபதி, அந்த பாத்திரமாகவே பிறந்தவர் போல இருக்கிறார்.

சற்றே குழப்பமான பாத்திரம் என்றால் கலை நடித்திருக்கும் வெற்றிச்செல்வன் பாத்திரம்தான். தி.மு.க. - அ.தி.மு.க., நல்லவன் - பொறாமைக்காரன் என்ற இருமைகளுக்குள் சிக்கித் தவிக்கிறது இந்தப் பாத்திரம். கபிலனின் மனைவியாக வரும் துஷாரா விஜயனுக்கு ஒரு சிறப்பான அறிமுகம் இந்தப் படம்.

1975ல் நெருக்கடி நிலை காலப் பின்னணியில் நடக்கிறது கதை. படத்தில் வரும் பல பாத்திரங்கள் அரசியல் சார்புடன் இருக்கின்றன. மஞ்சா கண்ணன் என்று ஒரு பாத்திரம் வருகிறது. அப்படி ஒரு பாத்திரத்தை உருவாக்க, நிச்சயம் துணிச்சல் தேவைப்படும். வடசென்னைக்காரர்கள், அந்தப் பாத்திரத்தின் சாயல், தற்போது யார் முகத்தில் படிந்திருக்கிறது என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள்.

இந்தப் படத்தில் தனி மனிதர்கள் கோபமடைவதும் சமாதானமாவதும் வேகமாக நடப்பதுபோலத் தோன்றுகிறது. ஒருவகையில் அதுதான் இந்தப் படத்தின் பலமும்கூட. இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் இந்தப் படத்தை இன்னும் சற்று சுருக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

சந்தோஷ் நாராயணனின் இசையும் கலை இயக்குனரின் திறமையும் படத்தை வேறு தளத்திற்கு நகர்த்தியிருக்கின்றன. வசனங்கள் பல இடங்களில் அசர வைக்கின்றன.

பா. ரஞ்சித், இந்தப் படத்தின் மூலம் அவருடைய ஆரம்ப காலப் படங்கள் ஏற்படுத்திய பரவசத்தைவிட கூடுதலான உணர்வுகளை ஏற்படுத்துகிறார். சார்பட்டா பரம்பரை நிச்சயமாக இந்த ஆண்டின் சிறந்த இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...