எப்படி இருக்கிறது தனுஷின் ஜகமே தந்திரம்?

3 years ago 789

நெட்ப்ளிக்ஸில் வெளியான தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? பார்ப்போம்.

மதுரையில் சிறிய அளவில் ரவுடித்தனம் செய்யும் தனுஷ் லண்டனில் இரு Gangster கும்பலுக்கு இடையிலான பனிப்போரில் எப்படி நுழைகிறார் எனும் ஒன்லைனில் ஈழ அரசியலையும் இனவெறிக்கு எதிரான கருத்தையும் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். 

ஆனால் வலுவில்லாத திரைக்கதையினாலும் லாஜிக் சறுக்கல்களினாலும் இப்படம் சலிப்பையே ஏற்படுத்துகிறது. கடினமான தேர்விலும் சென்டம் எடுக்கும் தனுஷுக்கு, கொரோனா கால ஃப்ரீ பாஸ் போல சாதாரணமான ஒரு கதாபாத்திரம். 

ஆனால் அதிலும் அசால்டாக ஸ்கோர் செய்திருக்கிறார் தனுஷ். ஆனால் படம் முழுக்க ரஜினி சாயலில் அவர் நடித்திருப்பது ஒரு கட்டத்தில் ரஜினியை மிமிக்கிரி செய்வது போன்ற உணர்வையே கொடுக்கிறது.

மதுரை வட்டார மொழி, துப்பாக்கி அருவாளுடன் வலம் வரும் கேங்ஸ்டர்கள் என தனது வழக்கமான டெம்ப்ளேட் உடன் மீண்டும் களமிறங்கி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். 

படத்தில் வரும் பல காட்சிகளும் கேமிரா கோணங்களும் அவருடைய முந்தைய படங்களை நினைவுபடுத்துகிறது. மேலும் படத்தை ஓடிடியில் பார்ப்பதால் அவருடைய பல பழைய படங்களை மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வையே அவை ஏற்படுத்துகின்றது.

இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் படத்தை ஓரளவு பார்க்க வைப்பது சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மட்டுமே. புஜ்ஜி, நேத்து போன்ற பாடல்கள் படத்தில் இடம் பெறாது என ஏற்கனவே கூறியிருந்த நிலையில் பின்னணி இசையில் வழக்கம்போல மிரட்டியிருக்கிறார்.

தொடர்ந்து வன்முறை தூக்கலாக இருக்கும் கேங்ஸ்டர் படங்களை இயக்கிவரும் கார்த்திக் சுப்புராஜ் இந்தமுறை இனவெறி அரசியலையும் புலம்பெயர்ந்து செல்பவர்களின் பிரச்சனையையும் கூடுதலாக பேச முயன்றிருக்கிறார்.

ஆனால் இலங்கை போர் பின்னணியை லண்டன் தாதாக்களுடன் ஒப்பிட்டதில் தொடங்கி, லண்டனில் இருக்கும் ஈழத்தமிழர்களை ஏதேனும் ஒரு இயக்கத்துடன் தொடர்புடையவர்களாக சித்தரித்திருப்பது வரை படம் பேசும் அரசியலில் பல சிக்கல்கள் உள்ளன. 

ஆனால் அதையும் மீறி  "எல்லைய தாண்டுனா நம்ம எல்லாரையும் கீழ் ஜாதியாதான் பாக்குறாங்க.. அப்புறம் நாம ஏன் ஜாதி பாக்கணும்" போன்ற வசனங்களுக்காக இயக்குனரை பாராட்டலாம்.

மொத்தத்தில் ஜகமே தந்திரம் தெளிவில்லாத அரசியல் பார்வையாலும், பலவீனமான திரைக்கதையினாலும் சோர்வையே தருகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...