எப்படி இருக்கு ”குட்டி ஸ்டோரி” ஆந்தாலஜி திரைப்படம்!

3 years ago 700

திரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் கெளதம் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் ‘குட்டி ஸ்டோரி’. காதலை கதைக்கருவாக வைத்து இந்த நான்கு குறும்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.

எதிர்பாரா முத்தம்

கெளதம் மேனன் தனது கல்லூரி பருவ நண்பர்களை நீண்ட நாட்களுக்கு பின் சந்திக்கிறார். அப்போது அவருடைய கல்லூரி கால நினைவுகளை பற்றி பேசுகிறார் கெளதம் மேனன். அப்போது காதலை பற்றி பேசும் கெளதம் மேனன், அமலா பால் உடனான தன்னுடைய நட்பை பற்றி சொல்கிறார். அந்த நிகழ்வுக்கு பின் அமலா பாலும், கெளதம் மேனும் நண்பர்களாக இருந்தார்களா? இல்லையா என்பதே மீதிக்கதை.

கெளதம் மேனனின் கல்லூரி பருவ கதாபாத்திரமாக நடித்துள்ள வினோத் கிஷன் திறம்பட நடித்துள்ளார். அமலா பாலின் நடிப்பும், ரோபோ சங்கரின் கவுன்ட்டர்களும் ரசிக்கும்படி உள்ளன. கெளதம் மேனனும் தன் பங்கிற்கு ஸ்டைலிஷாக நடித்துள்ளார். 

மனோஜ் பரம ஹம்சாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. தனது திரைப்படங்களைப் போல் இந்த குறும்படத்திலும் தன் காதல் முத்திரையை பதிக்கத் தவராத கெளதம் மேனன், காதல் காட்சிகளின் நீளத்தை குறைத்திருந்தால், எதிர்பாரா முத்தம் நினைவில் இருந்திருக்கும்.

அவனும் நானும்

ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள படம் அவனும் நானும். அமிதாஷ், மேகா ஆகாஷ் இருவரும் காதலித்து வருகிறார்கள். இருவரின் எல்லைமீறிய காதலால் மேகா ஆகாஷ் கர்ப்பமாகிறார். இதை தனது காதலன் அமிதாஷிடம் போனில் தெரிவிக்கிறார். இந்த விஷயம் தெரிந்ததில் இருந்தே அமிதாஷின் போன் ஸ்விட்ச் ஆப்பில் இருக்கிறது. இதையடுத்து அமிதாஷ் என்ன ஆனார்? மேகா ஆகாஷ் என்ன முடிவெடுத்தார் என்பதே மீதிக்கதை.

படத்தில் அமிதாஷுக்கு குறைந்தளவு காட்சிகளே உள்ளன. ஆனால் மேகா ஆகாஷ் தான் படம் முழுக்க பயணிக்கிறார். நடிப்பிலும் ஸ்கோர் செய்துள்ளார். மதுவின் இசை, அரவிந்த் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் எடிட்டிங் ஆகியவை படத்துக்கு பலமாக அமைந்துள்ளன. படத்தில் ஒருசில டுவிஸ்ட் கொடுத்து விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய்.

லோகம்

அனிமேஷன் கேமை மையமாகக் கொண்டு ஒரு காதலைச் சொல்ல முயன்றுள்ளார் வெங்கட் பிரபு. லோகம் என்ற கேமை நாயகன் வருண் விளையாடி வருகிறார். அந்த விளையாட்டில் ஒரு பெண்ணும் இணைகிறார். அவர் மீது நாயகன் வருண் காதல் வயப்படுகிறார். 

அந்தப் பெண்ணிடம் வருண் வாட்ஸ் அப் நம்பர் கேட்க, கேமில் குறிப்பிட்ட லெவலை முடித்துவிட்டால் நம்பர் தருகிறேன் என்கிறார் அந்தப் பெண். இறுதியில் அந்தப் பெண் அந்த லெவலை முடித்தாரா? வருணின் காதல் கைகூடியதா? என்பதே படத்தின் மீதிக் கதை.

இந்தக் கதையில் பெரும்பாலும் அனிமேஷன் கேம் தான் வருகிறது. அந்த கேமை தரமாக உருவாக்கி உள்ளார்கள். வருண், சாக்‌ஷி, சங்கீதா ஆகியோர் நேர்த்தியாக நடித்துள்ளனர். பிரேம்ஜியின் பின்னணி இசை கதையோடு ஒன்றி பயணிக்க வைக்கிறது. கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டி இருந்தால் லோகம் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். வெங்கட் பிரபுவின் மேஜிக் இதில் மிஸ்ஸிங்.

ஆடல் பாடல்

விஜய்சேதுபதியும், அதிதி பாலனும் கணவன் மனைவி, இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. ஆனால் விஜய் சேதுபதி வேறு ஒரு பெண்ணுடன் அடிக்கடி போனில் பேசி வருகிறார். ஒருகட்டத்தில் விஜய் சேதுபதியின் கள்ளக்காதல் அவரது மனைவி அதிதி பாலனுக்கு தெரிந்து விடுகிறது. அதன்பின் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.

திரைக்கதையை திறம்பட கையாண்டுள்ளார் இயக்குனர் நலன் குமாரசாமி. நாயகன் விஜய் சேதுபதியின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். குறிப்பாக தன்னுடைய கள்ளக்காதல் மனைவிக்கு தெரிந்த போது என்ன செய்வதென்று திகைத்துப்போகும் காட்சியில் விஜய் சேதுபதியின் நடிப்பு அற்புதம். அதிதி பாலனும் போட்டிபோட்டு நடித்துள்ளார். 

எட்வின் லூயிஸ் விஸ்வநாத் பின்னணி இசை பிரமாதம். ஒரே வீட்டில் நடக்கும் கதை என்றாலும் காட்சிகளில் கைவண்ணத்தை காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம். மேற்கண்ட நான்கு குறும்படங்களில் தனியாக ஜொலிக்கிறது ஆடல் பாடல்.


மொத்தத்தில் ‘குட்டி ஸ்டோரி’ காதலுக்காக.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...