80களில் புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் மோகன். அவரை வைத்து ஒரு படமாவது தயாரித்து விட மாட்டோமா நமக்கு லாபம் வந்து குவியாதா என்று அவர் தங்கி இருந்த இடத்தில் அவரை வைத்து படம் தயாரிக்க வரிசையில் நின்று காத்திருந்த தயாரிப்பாளர்கள் ஏராளம்.
அந்த ஆசை நடிகர் தேங்காய் சீனிவாசனுக்கும் வந்து விட எப்படியோ அரும்பாடுபட்டு நடிகர் மோகனை வைத்து கிருஷ்ணன் வந்தான் படத்தை தயாரிக்க முடிவு செய்து மோகனின் கால்ஷீட்டும் கிடைக்கபெற்றார்.
இயக்குனர் கே. விஜயன் இப்படத்தை இயக்க கிருஷ்ணன் வந்தான் திரைப்படம் கடந்த 1987 ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி வெளிவந்தது. மோகன், ரேகா, சிவாஜி கணேசன், கே.ஆர் விஜயா, நம்பியார் தேங்காய் சீனிவாசன் நடித்திருந்தனர்
கதாநாயகன் மோகனின் அப்பாவாக நயவஞ்சகராக நம்பியார் நடித்திருந்தார். அவர் நல்ல மனிதரான சிவாஜியை சொத்து விசயத்தில் ஏமாற்றி விட அந்த விரக்தியில் சிவாஜியின் மனைவி இறந்து விட சிவாஜிக்கு மன நலம் பாதிக்கப்படுகிறது.
நல்ல மனிதரை ஏமாற்றிய காரணத்தால் கதாநாயகன் மோகன் தன் தந்தை என்றும் பாராமல் தனது காதலி ரேகாவின் அண்ணன் தேங்காய் சீனிவாசனோடு சேர்ந்து தந்திரமாக நம்பியாரை மடக்கி தன் தவறை ஒப்புக்கொள்ள வைக்கும் கதைதான் இது.
வழக்கமான அந்தக்கால மசாலா டைப் கதைதான் இது. பாடல்களை இளையராஜா பிரமாதமாக அமைத்து கொடுத்து இருந்தார். ஒரு உறவு அழைக்குது, மாடிழுத்த வண்டி எல்லாம் இழுத்து பார்த்தேன், அண்ணே அண்ணே கொஞ்சம் வாங்க வாங்க, தனியாக படுத்து படுத்து பழகிப்போச்சு, சிங்கினா சிங்கியடி போன்ற பாடல்கள் தேனாய் இனித்தன. படத்துக்கு பெரும்பலமாய் இருந்தது இளையராஜாவின் இசை மட்டும்தான்.
இந்த படம் நன்றாக இருந்தாலும் ஏனோ ஒரு காரணத்தால் படம் பெரிய அளவில் பேசப்படாமல் தோல்வியை தழுவியது. இந்த படம் மூலம் தேங்காய் சீனிவாசன் பெரும் நஷ்டத்தை சந்தித்தார் என்றும் சொல்லப்படுகிறது.
வெள்ளி விழா நாயகன் மோகன் 80கள் தொடங்கி உச்சமாக நடித்து வந்த நேரத்தில் 87, 88களிலே அவரின் சினிமா வீழ்ச்சி லேசாக ஆரம்பித்து 90களில் முடிவுற்றது அந்த நேரங்களில் வந்த படம்தான் இது.
இப்படத்தில் முதலில் வரும் டைட்டில் பாடலான மாடிழுத்த வண்டியெல்லாம் இழுத்து பார்த்தேன் என்ற பாடலை இளையராஜா பாடி இருந்தார். தேங்காய் சீனிவாசன் அந்த காட்சியில் நடித்திருந்தார்.
எப்படியெல்லாம் கஷ்டப்படுறேன் பாருங்க என அந்த பாடலில் தேங்காய் சீனிவாசன் சொல்லாமல் தன் பணக்கஷ்டத்தை சிம்பாலிக்காக சொல்லி இருந்தார் எப்படி சொன்னாலும் கடனை உடனை வாங்கி படம் எடுத்த தேங்காய் சீனிவாசனுக்கு இப்படம் தயாரிப்பாளராக பெரிய தோல்வியை தீராத நஷ்டத்தையும் கொடுத்தது.
இதன் மூலம் சொல்லப்படுவது என்னவென்றால் மார்க்கெட்டில் யாராவது ஒரு நடிகர் முன்னணியில் இருந்தால் அவரை வைத்தே பெரும்பாலும் படம் தயாரிப்பார்கள். இது மிகவும் தவறான போக்கு.
நல்ல கதையும் திரைக்கதையும் தேர்ந்த நடிகரும் இருந்தால் எப்படிப்பட்ட படம் என்றாலும் நன்றாக ஓடும் உதாரணம் பாலா இயக்கிய சேது போன்ற படங்களை சொல்லலாம். ஜெயிக்கிற குதிரையிலேயே பணம் கட்டுவது என்பது தவறானது. ஜெயிக்கிற குதிரையும் தோற்கும் என்பதற்கு இது போன்ற படங்கள் ஓர் உதாரணம்.
இப்படம் பயங்கர தோல்வியை கொடுத்தது எம்.ஜி.ஆர் போன்றோர் தேங்காய் சீனிவாசனுக்கு உதவினர் என சொல்லப்படுவதுண்டு. இந்த படம் வெளியான மூன்று மாதங்களிலேயே தேங்காய் சீனிவாசன் தன் மரணத்தையும் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.