தாயின் கனவை நனவாக்க துடிக்கும் மகன்... கோடியில் ஒருவன் விமர்சனம்

3 years ago 27

நடிகர்-விஜய் ஆண்டனி

நடிகை-ஆத்மிகா

இயக்குனர்-ஆனந்த் கிருஷ்ணன்

இசை-நிவாஸ் கே பிரசன்னா, ஹரீஷ் அர்ஜுன்

ஓளிப்பதிவு-என்.எஸ்.உதயகுமார்

நடிகர் விஜய் ஆண்டனியின் தாயார், தனது மகனை ஐஏஸ் அதிகாரி ஆக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். தாயின் கனவை நனவாக்க சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வரும் விஜய் ஆண்டனி, ஹவுசிங் போர்டு பகுதியில் குடியேறுகிறார். அந்த ஹவுசிங் போர்டு பகுதியின் தரத்தையும், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த நினைக்கிறார். 

இதற்காக ஒரு சில விஷயங்களை செய்ய முயலும் விஜய் ஆண்டனி, வில்லன்களால் ஒரு சில பிரச்சனைகளை சந்திக்கிறார். இதனை அவர் எப்படி எதிர்கொண்டார்? ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற தாயின் கனவை விஜய் ஆண்டனி நனவாக்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் விஜய் ஆண்டனி, மிடுக்கான வேடம் ஏற்று நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் மற்றும் எமோஷனல் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கும் அவர் ரொமான்ஸ் காட்சிகளில் கோட்டை விட்டுள்ளார். நாயகி ஆத்மிகாவுக்கு, அதிகளவு காட்சிகள் இல்லாதது ஏமாற்றம். இருந்தாலும் வரும் காட்சிகளில் அழகு, பதுமையுடன் வந்து செல்கிறார்.

இப்படத்தில் நிறைய வில்லன்கள் இருக்கிறார். அதில் குறிப்பாக கே.ஜி.எப் வில்லன் ராமச்சந்திர ராஜு, உருவத்திலேயே பயமுறுத்தி வில்லத்தனத்திலும் மிரட்டி இருக்கிறார். மேலும் சூப்பர் சுப்பராயன், சூரஜ், பூ ராமு ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள். விஜய் ஆண்டனியின் அம்மாவாக நடித்துள்ள திவ்ய பிரபா, நேர்த்தியாக நடித்துள்ளார்.

இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன், படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் அதனை கையாண்டுள்ள விதம் சிறப்பு. ஒரு கவுன்சிலரால் என்னவெல்லாம் செய்ய முடியும், அவருக்கு வரும் தடைகள் என்னென்ன என்பதை புதுவிதமாக காட்டி இருந்தாலும், திரைக்கதை வேகத்தை கூட்டி இருந்தால் கோடியில் ஒருவனை இன்னும் ரசித்திருக்கலாம். ஹீரோ தோற்கும்படியான காட்சிகள் வைத்துள்ளது பாராட்டுக்குரிய விஷயம். 

நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை. ஹரீஷ் அர்ஜுனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவு கச்சிதம்.

மொத்தத்தில் ‘கோடியில் ஒருவன்’ வேகம் குறைவு.

Read Entire Article