நடிகர்-ஹர்பஜன் சிங்
நடிகை-லாஸ்லியா
இயக்குனர்-ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா
இசை-உதயகுமார்
ஓளிப்பதிவு-சாந்த குமார்
ஹர்பஜன் சிங், சதீஷ் மற்றும் நண்பர்கள் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார்கள். இதே கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க ஒரே ஒரு பெண்ணாக இவர்கள் வகுப்பறையில் வந்து சேருகிறார் லாஸ்லியா.
சில நாட்களில் ஹர்பஜன் சிங், சதீஷ் ஆகியோருடன் நெருங்கிய நண்பராக மாறுகிறார் லாஸ்லியா. திடீரென்று சில நாட்களில் அவர் இறந்து விடுவார் என்ற தகவல் நண்பர்களுக்கு கிடைக்கிறது. இதனால் வருத்தமடையும் நண்பர்கள், லாஸ்லியாவின் ஆசைகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள்.
இறுதியில் லாஸ்லியாவின் ஆசை என்ன? நண்பர்கள் நிறைவேற்றினார்களா? லாஸ்லியாவுக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஹர்பஜன் சிங், படம் முழுக்க அதிக வசனம் பேசாமல் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நடனம், ஆக்ஷன் என திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சதீஷ். காமெடியை விட சென்டிமென்ட் காட்சிகள் சதீஷுக்கு கைகொடுத்து இருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா சுட்டித்தனமாக, இளமை துள்ளளுடன் நடித்து இருக்கிறார். இவரது நடிப்பு சில இடங்களில் செயற்கைத்தனமாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே வந்தாலும் ஆக்ஷன் மற்றும் நடிப்பில் அசத்தி இருக்கிறார் அர்ஜுன். வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் ஜே.எஸ்.கே.சதீஷ்.
நட்பை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா. அதே நேரத்தில் நட்பை வெளிப்படுத்தும் விதமான அழுத்தமான காட்சிகள் இல்லாததால் திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் மேலோட்டமாக இருக்கிறது.
ஹர்பஜன் சிங்கை அதிகம் பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார் இயக்குனர். அவருக்கென்று கிரிக்கெட் காட்சிகள் வைத்திருப்பது போல் இருக்கிறது. அந்த காட்சியை கிராபிக்ஸ் இல்லாமல் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இறுதியில் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசியதற்கு வாழ்த்துகள்.உதயகுமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார். சாந்த குமார் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மொத்தத்தில் ‘பிரண்ட்ஷிப்’ நமத்துப்போன 'சிப்'ஸ்!