நடிகர்-அரவிந்த்சாமி
நடிகை-கங்கனா ரனாவத்
இயக்குனர்-ஏ.எல்.விஜய்
இசை-ஜிவி பிரகாஷ்குமார்
ஓளிப்பதிவுவிஷால் விட்டல்
1965 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தலைவி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய்.
1965ல் நடிகையாக இருக்கும் ஜெயா (கங்கனா), முன்னணி நடிகராக இருக்கும் எம்.ஜி.ராமச்சந்திராவுடன் (அரவிந்த் சாமி) இணைந்து நடிக்கிறார். அப்போது, எம்.ஜி.ராமச்சந்திராவின் நற்குணங்களை கண்டு வியந்து அவர் மீது ஜெயாவிற்கு ஈர்ப்பு ஏற்படுகிறது.
எம்.ஜி.ராமச்சந்திராவிடம் பயணிக்கும் ஆர்.என்.வீரப்பன் (சமுத்திரகனி), ஜெயாவை, எம்.ஜி.ராமச்சந்திராவிடம் இருந்து பிரிக்க முயற்சிக்கிறார். அரசியல் காரணம் சொல்லி, ஜெயாவை விட்டு எம்.ஜி.ராமச்சந்திரா விலகுகிறார். ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வருகிறார் ஜெயா. இறுதியில் எப்படி அரசியலில் ஜெயித்து முதலமைச்சர் ஆனார் என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரமாக கங்கனா வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்லலாம். வெகுளித்தனமாக ஆரம்பிக்கும் இவரின் நடிப்பு, ஈர்ப்பு, பிரிவு, அழுகை, ஏக்கம், துணிச்சல், கம்பீரம் எனப் பளிச்சிடுகிறார். ஒரு சில இடங்களில் ரசிக்க வைத்து இருக்கிறார். எம்.ஜி.ஆர்.ஆக நடித்திருக்கும் அரவிந்த் சாமி கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.
அரவிந்த் சாமி மற்றும் கங்கனாவின் நடிப்பில் குறையில்லை. ஆனால், இவர்களை எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆர்.என்.வீரப்பன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார் சமுத்திரகனி. பார்க்கும் பார்வையிலேயே பல வசனங்கள் பேசுகிறார். கருணாவாக வரும் நாசர், எம்.ஆர்.ராதாவாக வரும், ராதாரவி ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சசியாக வரும் பூர்ணாவிற்கு அதிகம் வேலையில்லை.
சினிமாவிற்காக திரைக்கதையில் மாற்றம் செய்து இருக்கிறார் இயக்குனர் விஜய். கங்கனா நடிகையாக வரும் காட்சிகளை குறைத்து இருக்கலாம். அதுபோல் முதல் பாதி நீளத்தை குறைத்து இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம். படத்தில் கிளைமாக்ஸ் காட்சியை தவிர மற்ற காட்சிகள், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஆழமாக பதியாதது வருத்தம். கலை மற்றும் வசனங்கள் படத்திற்கு பலம்.
ஜிவி.பிரகாஷின் இசையில் பாடல்கள் கவனம் ஈர்க்கவில்லை என்றாலும், பின்னணி இசையில் ஸ்கோர் செய்து இருக்கிறார். விஷால் விட்டலின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் 'தலைவி'-ஐ தலைவியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.