அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த்: ஒரு மாதம் ஓய்வெடுக்கத் திட்டம்

3 years ago 403

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் ரஜினி நடித்து வருகிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்பட பலர் நடித்து வருகின்றனர். 

கொரோனாவால் பலமுறை தடைபட்ட படப்பிடிப்பு, தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. ரஜினி படப்பிடிப்பில் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார்.

முன்னதாக, 2016-ம் ஆண்டு அமெரிக்காவில் ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். அதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்குச் சென்று உடல் நிலை குறித்து பரிசோதனை செய்துகொள்வார். 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாதில் படப்பிடிப்பில் இருக்கும்போது ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், மருத்துவ பரிசோதனையில் `கோவிட் நெகட்டிவ்' என வந்தாலும், அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுதல்கள் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அப்போது அவருக்குப் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், அச்சப்படும்படியாக எதுவும் இல்லாததால் சென்னை திரும்பினார்.

தற்போது, மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்வது உறுதியானது. அதனடிப்படையில் இன்று பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றிருக்கிறார் ரஜினிகாந்த். 

ஒரு மாத காலம் அங்கு தங்கி ஓய்வெடுக்க அவர் திட்டமிட்டு இருக்கிறார். அதிகாலை 3:00 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் விமானத்தில் அவர் புறப்பட்டு சென்று இருக்கிறார். அங்கிருந்து வேறு விமானம் மூலமாக அமெரிக்கா செல்கிறார்.

ஹாலிவுட் படப்பிடிப்பு காரணமாக நடிகர் தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷும் அமெரிக்காவில் இருக்கின்றனர். அவர்கள் ரஜினியுடன் இருந்து அவரை பார்த்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...