'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவினர் மீது போனி கபூர் காட்டம்

3 years ago 459

இதுபோன்ற செயலை எதிர்பார்க்கவில்லை எனவும், நாசவேலைகளில் ஈடுபடுவதற்கு ஈடான விஷயம் இது என்றும் 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவினர் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. 'ஆர்.ஆர்.ஆர்' என்று அழைக்கப்படும் இந்தப் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

அக்டோபர் 13-ம் தேதி 'ஆர்.ஆர்.ஆர்' வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதே தேதியில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன் நடித்துவரும் 'மைதான்' படமும் வெளியாகும் என அறிவித்திருந்தது படக்குழு. 

'மைதான்' படக்குழுவினர் முன்னதாகவே வெளியீட்டுத் தேதியை அறிவித்துவிட்டதால், 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவினரின் அறிவிப்பால் கடும் கோபமடைந்தனர்.

'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவினரின் அறிவிப்பு குறித்து தனது கடும் அதிருப்தியைப் பல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார் போனி கபூர். மீண்டும் இந்த வெளியீட்டு சர்ச்சை தொடர்பாக போனி கபூர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

"'ஆர்.ஆர்.ஆர்' - 'மைதான்' படங்களுக்கு இடையேயான மோதல் துரதிர்ஷ்டவசமானது. அதே சமயம் நெறிமுறையற்றதும் கூட. எங்களது தவறினால், அலட்சியத்தினால் நாங்கள் படத்தைத் தயார் செய்யாமல் 'மைதான்' படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போகவில்லை.

19 மார்ச் 2020 முதல் கடைசிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கவிருந்தோம். அதுவரை 65% சதவீதப் படப்பிடிப்பு முழுமையடைந்திருந்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களும், வீரர்களும் ஏற்கெனவே இந்தியாவில் இருந்தனர்.

துரதிர்ஷ்டவசமாக, ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. எல்லோரையும் திரும்ப அனுப்பிப் படப்பிடிப்பை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. படப்பிடிப்புக்காக நாங்கள் உருவாக்கிய 15 ஏக்கர் கால்பந்து மைதான இடம் அப்படியே தொடர வேண்டியிருந்தது. நிலத்தில் புல் வளர்ந்துவிடும், வருடத்தின் அந்த நேரத்தில் மண்ணின் தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் அதற்கு இருந்தன.

ஆம், அதற்காகப் பெரிய அளவு பணத்தை நாங்கள் செலவிட்டோம். ஜனவரி/ பிப்ரவரி முதல் படப்பிடிப்பு செய்ய முடியும் என்பதை உணர்ந்தவுடன் உடனடியாக எங்கள் வெளியீட்டுத் தேதியை 15 அக்டோபர் 2021 என்று நாங்கள் அறிவித்துவிட்டோம். அது ஒரு பண்டிகைக் காலம். இந்த மாதிரியான ஒரு பெரிய பட்ஜெட் படத்துக்கு அந்தக் காலகட்டத்தில் வெளியிடுவது அவசியமாகிறது.

ஆனால், கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் கழித்து 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படமும் அதே தேதியில் வெளியாகும் என்று ராஜமௌலி அறிவித்தது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. எங்கள் 'மைதான்' படத்தின் நாயகன் அஜய் தேவ்கன் 'ஆர்.ஆர்.ஆர்' படத்திலும் நடித்திருக்கிறார் என்பதையும் மீறி இப்படி ஒரு அறிவிப்பு.

இவ்வளவு நாள், எனது அனுபவத்தில், உலகத்தில் எங்கும் ஒரே நடிகர் நடித்திருக்கும் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியானதாக நான் கேள்விப்பட்டதில்லை. 'ஆர்.ஆர்.ஆர்' தயாரிப்பாளர்களிடமிருந்து இதுகுறித்து எந்தவிதத் தொடர்பும் இல்லை. இந்த முடிவை அவர்கள் எடுத்திருப்பது குறித்து அஜய் தேவ்கனுக்கும் சரியான நேரத்தில் சொல்லப்படவில்லை.

நான் ராஜமௌலியைத் தொடர்பு கொண்டபோது தயாரிப்பாளர்கள்தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், அவர் முடிவு இல்லை என்றும் சொன்னார். அதை நான் நம்ப மறுக்கிறேன். ராஜமௌலியின் இந்தச் செயலால் ஒட்டுமொத்தத் திரைத்துறையிலும் விரிசல் ஏற்பட்டதைப் போல இருக்கிறது.

நாம் ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையாக நின்று, முறையாக, ஒழுங்கான ஒரு துறையாக வேலை செய்யத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. அதுவும் ராஜமௌலி போன்ற மூத்த, வெற்றிகரமான ஒருவரிடமிருந்து இதைச் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. ஸ்ரீதேவி 'பாகுபலி'யில் நடிக்காமல் போனது குறித்து சில தவறான புரிதல்கள் இருக்கலாம். ஆனால். அந்த நேரத்தில் அதற்கான காரணங்கள் என்று தயாரிப்பாளர்கள் ராஜமௌலியிடம் சொன்ன விஷயங்களில் உண்மையில்லை.

ஒரு இயக்குநராக ராஜமௌலியின் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. மேலும் 'பாகுபலி' போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படத்தைக் கொடுத்த பிறகு விடுமுறை நாள் வெளியீடோ, இதுபோன்ற மிரட்டல் விடுவது மாதிரியான செயல்களோ அவருக்கு உண்மையில் அவசியமற்றவை.

ஒருவரைக் கொடுமைப்படுத்துவது, (அவரைக் கெடுக்க) நாசவேலைகளில் ஈடுபடுவதற்கு ஈடான விஷயம் இது. இதனால் இரண்டு படங்களைப் பார்க்க வரும் ரசிகர்கள் எண்ணிக்கையில் இழப்பு ஏற்படுவதோடு, மீண்டும் மக்களைத் திரையரங்குக்கு வரவழைக்கும் எல்லாப் படங்களும் தேவை என்கிற நிலையில் இருக்கும் திரையரங்குகளுக்கும் இழப்பாகும்.

இதைத் தாண்டி நாங்கள் 'மைதான்' திரைப்படத்தின் மீது முழு நம்பிக்கையோடு இருக்கிறோம். இதுநாள் வரை அஜய் தேவ்கனின் நடிப்பில் வந்த சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இதுவே இந்தப் படம் எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்பதைச் சொல்லும்.

'மைதான்' அக்டோபர் 15 அன்று வெளியாகும். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் நூற்றுக்கணக்கானவர்களின் தொழில் வாழ்க்கையில் விளையாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒருவரை முதுகில் குத்தும் செயலில் நான் இறங்கவே மாட்டேன். எனது முதன்மை நடிகர்களிடம் படத்தின் வெளியீட்டுத் தேதியைச் சொல்லாமல் இருக்க மாட்டேன். அதனால் எல்லோருக்கும் முன்னால் 'மைதான்' வெளியீட்டுத் தேதியை வெளிப்படையாக அறிவித்தேன். அந்தத் தேதியில் வெளியிடுவேன்".

இவ்வாறு போனி கபூர் தெரிவித்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...