சித்தி 2 தொடரிலிருந்து விலகினார் ராதிகா...இனி அந்த கேரக்டரில் நடிக்கப்போவது யார்?

3 years ago 689

1999-ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் ‘சித்தி’. சி.ஜே.பாஸ்கர் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்திருந்த இத்தொடர் அப்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. இதையடுத்து மீண்டும் 2020-ம்ஆண்டின் தொடக்கத்தில் சித்தி 2 சீரியல் ஆரம்பமானது.

ஆரம்பித்த ஒரு சில மாதங்களில் கொரோனா பரவல் ஆரம்பிக்க படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து சித்தி 2 சீரியலில் ராதிகாவின் கணவராக நடித்து வந்த பொன்வண்ணன் உள்ளிட்ட சில கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டு மீண்டும் 2020-ம் ஆண்டு  ஜூலை மாதத்திலிருந்து ஷூட்டிங் தொடங்கியது.

பொன்வண்ணன் கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவியும், நிகிலா ராவ் கேரக்டரில் காயத்ரி யுவராஜ், ஷில்பா நடித்திருந்த ரோலில் ஜெயலட்சுமியும் நடிக்க தற்போது புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. 

தற்போது இத்தொடரில் கவின் - வெண்பா திருமணம் அதை ஒட்டி நடக்கும் பிரச்னைகள் ஒளிபரப்பாகி வருகிறது.

முக்கிய திருப்புமுனையை எட்டியிருக்கும் சித்தி 2 சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக சமூகவலைதளங்களில் சமீபகாலமாகவே தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் சித்தி 2 தொடர் தற்போது முடிவடையாது என்று ரசிகர்களிடம் தெரிவித்திருந்தார் ராதிகா.

இந்நிலையில் தற்போது இத்தொடரிலிருந்து விலகுவதாக நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, “மகிழ்ச்சியும் சோகமும் கலந்த மனநிலையில் இருக்கிறேன். 'சித்தி 2' மற்றும் மெகா தொடர்களிலிருந்து இப்போதைக்கு விலகுகிறேன். 


எனது கடின உழைப்பை கொடுத்திருக்கிறேன். அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களிடமும், என்னுடன் நடித்தவர்களிடமும் இருந்து சோகத்துடன் விடை பெறுகிறேன்.

ஆனால், சீரியல் தொடர வேண்டும். கவின், வெண்பா மற்றும் யாழினிக்கு வாழ்த்துகள். எனது ரசிகர்களுக்கு என் அன்பு. நிபந்தனையற்ற அன்புக்கு நன்றி. 

தொடர்ந்து 'சித்தி 2'வைப் பாருங்கள். எனது சிறந்த பங்களிப்பு இனிமேல் தான் வரவிருக்கிறது” இவ்வாறு ராதிகா தெரிவித்துள்ளார்.


தனது கணவருடன் முழுநேர அரசியலில் ஈடுபட இருப்பதால் தான் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக தெரிகிறது. இதுவரை சித்தி 2 தொடரில் சாரதா டீச்சராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ராதிகாவை இனி அந்த கேரக்டரில் பார்க்க முடியாது என்பதை அறிந்து அவரது ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். 

இனி அந்தக் கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...