தலைவி படத்தின் மழை மழை பாடல் டீஸர் வெளியீடு !

3 years ago 384

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி எனும் பெயரில் திரைப்படமாக உருவாகி உள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் பெரும் வரவேற்பை பெற்றது. 

விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை முதல் அரசியல் வாழ்க்கையிலான காட்சிகள் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாக உள்ளது. மழை மழை எனும் அந்த பாடலின் டீஸர் காட்சி தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தலைவி திரைப்படம் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாக உள்ளதால், அதன் இறுதிகட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. 

இந்த படத்தில் எம்.ஜி.ஆர்-ஆக நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளார். அரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர். கெட்டப் பலரை வாய் பிளக்க செய்துள்ளது. பார்ப்பதற்கு அப்படியே எம்.ஜி.ஆர் போன்று உள்ளதாக பலரும் அரவிந்த் சாமியை வாழ்த்தி வருகின்றனர். 

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் நடிப்பது மிகவும் சவாலாக இருந்தாக தலைவி திரைப்பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை கங்கனா ரணாவத் கூறியிருந்தார். உடல் பருமனை ஏற்றி குறைக்க மிகவும் சிரமப்பட்டதாகவும் தெரிவித்தார். 

மேலும் இந்த நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட நடிகை கங்கனா ரனாவத், கண்ணீர் சிந்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். தன்னை மிகவும் மரியாதையாக இயக்குனர் விஜய் நடத்தியதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

எம்.ஜிஆரின் நெருங்கிய தோழராக திகழ்ந்த ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்திரமும் தலைவி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. நடிகர் சமுத்திரக்கனி அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரின் லுக்கும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த படத்தின் முதல் பாடலை கேட்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். இப்பாடல் குறித்து வெளியாகியுள்ள கங்கனா ரனாவத்தின் போஸ்டரும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...