திரையரங்க உரிமையாளர்களின் கெடுபிடி: டிவியில் நேரடியாக 'ஏலே' ஒளிபரப்பு

3 years ago 494

திரையரங்க உரிமையாளர்களின் கெடுபிடியால், 'ஏலே' படத்தினை நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படக்குழு முடிவு செய்துள்ளது.

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஏலே'. சமுத்திரக்கனி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ரிலையன்ஸ் நிறுவனம், ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் வால் வாட்சர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்து பிப்ரவரி 12-ம் திகதி வெளியாக இருந்தது.

திரையரங்கில் வெளியிடுவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போது, 30 நாட்கள் கழித்துத் தான் ஓடிடி வெளியீடு என்ற கடிதம் கேட்டது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம். 

ஆனால், இந்தக் கடிதத்தைக் கொடுக்க தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் எந்தவொரு சுமுக முடிவும் எட்டவில்லை. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கமும் தங்களது கடும் அதிருப்தியை தெரிவித்தது.

இந்நிலையில், 'ஏலே' படத்தின் தயாரிப்பாளர்கள் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். முதன்முறையாகத் திரையரங்கம், ஓடிடி என்ற எதுவுமின்றி நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் பிப்ரவரி 28-ம் திகதி அன்று மதியம் 3-ம் மணிக்கு ஒளிபரப்பாகிறது 'ஏலே' திரைப்படம்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்புக்கான காரணம் குறித்து, "சில ஆச்சரியகரமான புது விதிகளாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களாலும் படத்தைத் திரையரங்கிற்குக் கொண்டு வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. 

ஆகையால் திரையரங்குகளைத் தவிர்த்து எங்கள் படத்தினை உலகம் முழுதும் உள்ள ரசிகர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது” என்று 'ஏலே' படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த அதிரடி அறிவிப்பு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதால், ஹாட்ஸ்டார் ஓடிடியில் இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


  
NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...