நடிகர் விஜய் தவற விட்டு பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்கள் பற்றி தெரியுமா?

3 years ago 394

நடிகர் விஜய் தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அப்பா இயக்குநர், அம்மா பின்னணி பாடகி என சினிமா பின்னணியைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தாலும், விமர்சனங்களை உரமாக்கி, தனக்கான வளர்ச்சியில் அளவற்ற கடின உழைப்பை வழங்கி முன்னணி நடிகராக வளர்ந்ததில் விஜய்க்கே அதிக பங்குண்டு.

வெறும் நடிப்பு மட்டுமல்லாமல் நடனம், இசை, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என அனைத்திலும் பட்டையைக் கிளப்புகிறார் விஜய். நாளைய தீர்ப்பு படத்திற்கும் தளபதி 65 படத்திற்கும் இடையேயான விஜய்யின் திரை வாழ்க்கை பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் எனபதில் சந்தேகமில்லை. 

தொடர் தோல்விகளை சந்தித்த போதிலும் துவண்டு போகாமல், அதை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டு, இன்னும் தன்னை கூர்தீட்டி பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார் விஜய். 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் விஜய் தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்துள்ளார். 

ரஜினிக்கு பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் தனது நடிப்பால் கவர்ந்தது விஜய் என்றால் அது மிகையாகாது.

விஜய்க்காக எழுதப்பட்ட பல கதைகளை அவர் மிஸ் செய்து, அதில் வேறு நடிகர் நடித்து, பிளாக்பஸ்டர் ஹிட்டானதெல்லாம் உண்டு. அந்தப் படங்களை இங்கே பார்க்கலாம்.

முதல்வன் (1999)

இயக்குநர் ஷங்கர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக இருந்தவர் என்பதை நாம் அறிவோம். முதல்வன் படத்தில் அவர் விஜய்யை நடிக்க வைக்க தனது அஸோசியேட் மூலம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். ஆனால் பேச்சு வார்த்தை சரியாக நடக்காததால் முதல்வன் பட வாய்ப்பை தவற விட்டிருக்கிறார் விஜய். பின்னர் அர்ஜூன் நடிப்பில் வெளியான அந்தப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

தீனா (2001)

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தீனா படத்தின் கதையை விஜய்யை மனதில் வைத்துதான் எழுதியுள்ளார். ஆனால் அப்போது அவர் மற்ற படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் இந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். பின்னர் விஜய்யின் திரைப்போட்டியாளராகக் கருதப்படும் அஜித் நடிப்பில் வெளியாகிய இந்தப் படம் தான் அவருக்கு ’தல’ என்ற அடைமொழியை பெற்றுத்தந்தது.

உன்னை நினைத்து (2002)

இயக்குநர் விக்ரமன் இயக்கிய இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் விஜய் தான். அவரும் லைலாவும் சம்மந்தப்பட்ட சில காட்சிகள் கூட படமாக்கப்பட்டன. ஆனால் ஏதோ சில காரணங்களால் தொடர்ந்து விஜய்யால் நடிக்க முடியாமல் போக, பின்னர் விஜய் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் சூர்யா நடித்தார். படம் வெளியாகி சூர்யாவின் திரை வாழ்க்கையில் முக்கியமான இடத்தைப் பெற்றது.

தூள் (2003)

இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய் நடிக்க வேண்டிய படம் தான் தூள். அவர் தவறவிடவே அதில் விக்ரம் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆட்டோகிராஃப் (2004)

இயக்குநர் சேரன் ஆட்டோகிராஃப் கதையை விஜய்யை மனதில் வைத்து தான் எழுதியிருக்கிறார். ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அவரால் நடிக்க முடியாமல் போகவே, தானே ஹீரோவாக களமிறங்கினார் சேரன். இந்தப் படம் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் உள்ளது.

சண்டக்கோழி (2005)

விஜய்க்காக லிங்குசாமி எழுதிய கதை தான் சண்டைக்கோழி, அவரால் நடிக்க முடியாமல் போகவே விஷாலை வைத்து இயக்கினார்.

சிங்கம் (2010)

இயக்குநர் ஹரி எழுதிய சிங்கம் கதை விஜய்க்கு தான். ஆனால் இப்போதைக்கு போலீஸ் கதாபாத்திரம் வேண்டாம் என விஜய் சொன்னதால், சூர்யாவை வைத்து இயக்கினார்.

வேட்டை (2012)

சண்டைக்கோழியில் தான் இணைய முடியவில்லை இதிலாவது சேர்ந்து பணியாற்றலாம் என வேட்டை படத்தில் மாதவன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய்யை அணுகியிருக்கிறார் லிங்குசாமி. ஆனால் ஏதோ காரணத்தினால் அவர் மறுத்து விட்டார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...