பிக்பாஸ் சீசன் 4 இறுதிப் போட்டி: மக்கள் ஆதரவை பெறுவாரா ரியோ ராஜ்?

4 years ago 269

ஒரு சாதாரண  குடும்பத்தில் இருந்து வந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியக் கனவோடு பயணிப்பவர் தான் இந்த ரியோ ராஜ்.

பிக் பாஸ் சீசன் 4 இறுதிச் சுற்றுக்கு தேர்வாகி இருக்கும் இவருக்கும் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.

1989 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்த ரியோ ராஜ், அங்கேயே தனது பள்ளி, கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார்.

இவருடைய தந்தை ஆரம்ப காலங்களில் ஒரு ட்ரைவராக தொழில் புரிந்துள்ளார். ரியோவின் தாயும், தம்பியும் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று குடும்பத்தினை கவனித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையத்தில் உள்ள அரசு பாய்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூலில் பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், ராகவேந்திரா பாலிடெக்னிக் காலேஜில் டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்தார்.

பின்னர் கோயம்புத்தூருக்கு சென்ற அவர், அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கியுள்ளார்.

இருந்தாலும் இவரது  நீண்ட நாள் ஆசையும், கனவும் அவருடைய முகம் மற்றும் திறமைகள் எல்லாம் சின்னத்திரையில் தெரிய வேண்டும் என்பதே.

தனக்கொரு வாய்ப்புக் கிடைக்காதா  என்ற ஏக்கத்தில், தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் ஏராளமான நேர்காணல்களில் கலந்து காெள்ள ஆரம்பித்துள்ளார் ரியோ.

அப்போது அவரின் முயற்சிக்கு கிடைத்த பரிசுதான் விஜய் டிவியின் பிரபல தொடரான கனா காணும் காலங்கள் சீரியல் வாய்ப்பு .

விஜய் டிவியில் ஆரம்ப காலங்களில் வெளிவந்த  கனா காணும் காலங்கள் சீரியல், கல்லூரியின் கதை சீரியல் போன்றவற்றில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி சின்னத்திரையில் தனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினார்.

இங்கு ஆரம்பித்த  ரியோ ராஜின் சின்னத்திரை பயணம் அவருக்கு சிறப்பான வரவேற்பைக் கொடுத்தது. இதன் பிறகுதான் அவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் பணியாற்றத் தொடங்கினார்.

கல்லூரிக் காலம், சுடச்சுட சென்னை, யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ், ப்ரீயா விடு  என பல பிரபல்யமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, ஆண்கள்- பெண்கள் என அனைத்து தரப்பினரிடையேயும் இவர் பிரபலமாகத் தொடங்கினார்.

இதன் பின்னர் மீண்டும் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலில் சரவணனாக நடிக்க  வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ரியோ பட்டி தொட்டி எல்லாம் அறியப்பட்டார்.

2015ஆம் ரியோ ராஜ் சன் மியூசிக்கில் இருக்கும்போது  சிறந்த தொகுப்பாளருக்கான விகடன் விருதைப் பெற்றுள்ளார்.

இதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி தொடருக்காக  அவருக்கு மற்றுமொரு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்திருக்கிறது.

இதன்பின்னர் விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டார். மீண்டும் விஜய் டிவியிலேயே ரெடி ஸ்டெடி போ, வைஃப் கைல லைஃப், ஜோடி நம்பர் 1 என பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்க தொடங்கினார் .

நீண்ட நாட்களாக காதலித்து வந்த ஸ்ருதி என்பவரை 2017 ஆம் ஆண்டு திருமணம் முடித்தார் ரியோ. தற்போது அவர்களுக்கு ரித்தி என்ற அழகான ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

சின்னத்திரையில் பிரபல்யமாகி வந்த ரியோ ராஜ்  வெள்ளித்திரையிலும் கால்தடம் பதிக்கத் தொடங்கியுள்ளார்.

விக்ரம் பிரபாகரனின், சத்ரியன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் ரியோ ராஜ்.

ரியோ தற்போது ஹீரோவாக நடித்துள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தை  பானா காத்தாடி புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கிறார். இதில்  ரியோவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்.

பிக்பாஸ் வீட்டில் கிடைக்கும் பிரபல்யம் மூலம் வெள்ளித்திரையில் ஏராளமான வாய்ப்புகள் தேடிவருமென்ற எதிர்பார்ப்புடனேயே ரியோ ராஜ் சீசன் 4-வில் பங்கெடுத்துள்ளார்.

இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்த 6 பேரில், கேப்ரியெல்லா 5 லட்சம் ரூபாய் பணப் பெட்டியுடன் வெளியேறிவிட்ட நிலையில், எஞ்சியுள்ள ஐந்து பேருடன் மோதி டைட்டிலை வெல்வாரா ரியோ ராஜ்? ஞாயிற்றுக் கிழமை வரை காத்திருக்க வேண்டும்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...