தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முதல் சீரியல்கள் வரை மக்கள் மத்தியில் பிரபலமாகும் பலருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு எளிதில் கிடைக்கிறது.
அதிலும், விஜய் டிவி மூலம் பிரபலமடையும் நடிகர் நடிகைகளுக்கு இந்த வாய்ப்பு மிக அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். விஜய் டிவி நிகழ்ச்சிகளில் சீரியல், பாட்டு, இயக்கம், காமெடி என பல பிரிவுகளில் கலக்கும் பிரபலங்கள் பலர் தற்போது வெள்ளித்திரையிலும் கலக்கி வருகின்றனர்.
அதிலும் சமீபத்தில் மக்களின் பேராதரவை பெற்ற குக்கு வித் கோமாளி ஷோவில் கலக்கிய புகழ், ஷிவாங்கி, அஸ்வின், பவித்ரா என பலர் தற்போது வெள்ளித்திரையில் நடித்து வருகின்றனர்.
அதேபோல, விஜய் டிவியின் ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரோஷினி ஹரிப்பிரியா தற்போது வெள்ளித்திரையில் நடிக்க போவதாகவும், அவருக்கு பதிலாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வேறுஒரு புதுமுகத்தை தேர்வு செய்துள்ளதாகவும் நாடக குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
இந்த நிலையில், விஜய் டிவி சீரியலில் நடித்து வரும் மற்றொரு நடிகையும் வெள்ளித்திரையில் நுழையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் வேறு யாருமில்லை, தற்போது தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் கதாநாயகியாக நடித்துவரும் நடிகை பவித்ரா தான்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை பவித்ரா. இவர் விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு, ஆபீஸ், மெல்ல திறந்த கதவு, சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமடைந்தார்.
மேலும் ஈரமான ரோஜாவே சீரியலில் கதாநாயகியாக நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். இந்த தொடர் 800 எபிசோடுகளை கடந்து ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிந்தது. மேலும் தற்போது தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.