பிரபல தெலுங்கு நடிகர் உத்தேஜின் மனைவி பத்மாவதி இன்று காலை மரணம் அடைந்தார். தெலுங்கு நடிகர் உத்தேஜின் மனைவி பத்மாவதிக்கு புற்றுநோய் இருப்பது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிய வந்தது.
இதையடுத்து அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அண்மையில் அவரின் நிலைமை மோசமடையவே பசவதாரகம் புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். பத்மாவதியின் மரண செய்தி அறிந்த உடன் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மருத்துவமனைக்கு விரைந்து வந்தார்.
சிரஞ்சீவியை பார்த்த உத்தேஜ் அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதார். உத்தேஜ் மற்றும் அவரின் மகளுக்கு சிரஞ்சீவி ஆறுதல் கூறினார். பிரகாஷ் ராஜ், நடிகை ஜீவிதா ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்து உத்தேஜுக்கு ஆறுதல் கூறினார்கள்.
உத்தேஜின் மயூகா டாக்கீஸ் ஃபிலிம் ஆக்டிங் ஸ்கூலை பத்மாவதி தான் நிர்வகித்து வந்தார். மேலும் தன் கணவருடன் சேர்ந்து ரத்ததான முகாம்கள் உள்பட பல நல்ல காரியங்களை செய்து வந்தார்.
பத்மாவதியின் இழப்பை தாங்க உத்தேஜுக்கு கடவுள் தான் தைரியம் கொடுக்க வேண்டும் என்று பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.