90களின் இறுதியில் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம வந்தவர் ரம்பா. தொடையழகி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட அவர் தனது 15வது வயதில் 1992-ம் ஆண்டு சர்கம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அவரின் முதல் படமே வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அதே ஆண்டு தெலுங்கு திரையுலகிலும் என்ட்ரி கொடுத்த அவர் வெற்றி நாயகியாக வலம் வந்தார்.
பின்னர் 1993-ம் ஆண்டு தமிழில் உழவன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரம்பா தோன்றி இருப்பார். இந்த படத்தில் வரும் பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ பாடல் இன்று வரை பலரின் பிளே லிஸ்டுகளை ஆக்கிரமித்துள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான உள்ளத்தை அள்ளத்தா படத்தில் தான் ரம்பா கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து செங்கோட்டை, சுந்தர புருஷன், நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, விஐபி, மின்சாரக் கண்ணா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
திரையில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே ரஜினி, கமல், விஜய், அஜித், கார்த்திக், அர்ஜுன், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தார். ஒரு கட்டத்தில் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிசியான நடிகையாக மாறினார் ரம்பா.
மேலும் மம்முட்டி, சிரஞ்சீவி, நந்தமுரி பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் மற்றும் மோகன்லால் போன்ற தென்னிந்திய உச்ச நடிகர்களுடன் ரம்பா ஜோடி சேர்ந்தார். அதே போல் ஜுட்வா மற்றும் பந்தன் ஆகிய படங்களில் சல்மான் கானுடன் சேர்ந்து நடித்ததன் மூலம் பாலிவுட்டிலும் பிரபலமானார்.
ஆனால் பெரும்பாலான திரை பிரபலங்கள் பெரும்பாலும் சறுக்கும் இடம் தயாரிப்பு தான். அப்படி தான் தயாரிப்பாளராக வேண்டும் என்று ஆசைப்பட்ட ரம்பா த்ரீ ரோசஸ் என்ற படத்தை தயாரித்தார்.
ஜோதிகா, லைலா, ரம்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்த படத்தை தனது சகோதரரின் உதவியுடன் தயாரித்து நடித்தார். இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது, மேலும் படம் வெளியான பிறகு அதிகளவில் கடனில் மூழ்கினார் ரம்பா.
கடனை அடைப்பதற்காக சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள தனது வீட்டை விற்றுவிட்டார். கடனை அடைத்து விட வேண்டும் என்று மிகவும் குறைந்த விலைக்கு அந்த பிரம்மாண்ட வீட்டை ரம்பா விற்றதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து பல படங்களில் ரம்பா நடித்தாலும் அதற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனிடையே கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதனை திருமணம் செய்ய முடிவு செய்தார். 2010-ம் ஆண்டு திருமணம் செய்த இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ரம்பாவின் கணவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் அவரை ரம்பா விவாகரத்து செய்யப்போவதாகவும் தகவல் வெளியானது.
எனினும் தனது கணவரை விவாகரத்து செய்யவில்லை என்று ரம்பா விளக்கமளித்தார். அவர் தற்போது தனது குடும்பத்துடன் டொரண்டோவில் வசித்து வருகிறார். வெள்ளித்திரையை போலவே சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார்.